சாவ் பாலோ, ஜூன், 4 – பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவானான பீலேயின் மகனுக்கு 33 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பீலேயின் மகன் எட்சன் சோல்பி டோ நசிமெண்டோ (43) போதை மருந்துக் கும்பலுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்கான தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியானது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுசானா பெரைரா அவருக்கு 33 ஆண்டுகள் சிற தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவரது பாஸ்போர்ட்டை இந்த வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளி விரும்பினால் மேல்முறையீடுக்கு மனு செய்யலாம் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தன்மீதான குற்றங்களை எட்சன் மறுத்தபோதும், தொழில்முறை கால்பந்து விளையாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் போதை பொருள் உபயோகித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அந்நாட்டின் துறைமுக நகரமான சாண்டோசில் கடந்த 2005-ல் 50 பேருடன் கைது செய்யப்பட்ட இவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்போது அவர் ஆறு மாதங்களை உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட சிறையில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.