ராஞ்சி, ஜூன் 9 – ஜார்க்கண்ட்டில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 18 வெடி குண்டுகளை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.பிரதமர் நரேந்திர மோடியை குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்காக இந்த குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
பாட்னா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அமைப்பினரால் கடந்த மே மாதம் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பதுங்கியிருந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஒரு நபர், நேற்று கைது செய்யப்பட்டார். இவர்கள் கொடுத்த தகவலின் படி ராஞ்சி அருகேயுள்ள இரண்டு வெவ்வேறு கிராமங்களில் 18 வெடி குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.
தேர்தல் பிரசாரத்தின் போது வாரணாசி, கான்பூர், டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மோடியை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் கடுமையான பாதுகாப்பு காரணமாக சதித் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.