டெல்லி, ஜூன் 11 – அமைச்சர்கள் அனைவரும் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள், தங்களது சொத்துக்கள், கடன் மற்றும் நடத்திவரும் தொழில் குறித்த அனைத்து விவரங்களையும் தன்னிடம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
மத்தியில், புதிய அரசு பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், அமைச்சர்கள் தங்களது சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், “சொத்துக்கள், கடன், ஈடுபட்டு வந்த தொழில் குறித்த விவரங்களை ஜூலை இறுதிக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சொத்துக்கள் அரசுக்கு விற்பனை செய்யப்படுகிறதா, அல்லது அவர்களின் வர்த்தக நிறுவனங்களில் இருந்து அரசு கொள்முதல் செய்கிறதா என்பது போன்ற தகவல்களை சேகரிக்க இது உதவும் என்று கூறப்படுகிறது.
இதுபோல அரசிடம் நேரடி வர்த்தக உறவை அமைச்சர்களோ, அவர்களது உறவுக்காரர்களோ வைத்துக்கொள்ள கூடாது என்பது அரசின் விதிமுறையாகும்.
அதே நேரத்தில் புதிய அரசுகள் வரும்போது வெளியிடப்படும் அறிக்கைதான் இது என்றும் புதிதாக எதுவும் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.