பெய்ஜிங், ஜூன் 17 – சீனா அரசு கடந்த சில ஆண்டுகளாக பூடான் நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்டை நாடான பூடானுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தியா– பூடான் இடையே வலுவான நட்புறவு மேலும் வளரும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சீனாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சூன்யிங் கூறியதாவது:–
“பூடானுடன் நாங்கள் தூதரக உறவுகளை அமைத்துக் கொள்ளவில்லை. எனினும், இரு நாடுகளிடையே நட்பு ரீதியான பரிமாற்றங்களும், பயண வருகைகளும் தொடரும். பூடானின் சுதந்திரம், இறையாண்மை, எல்லையில் ஒற்றுமை ஆகியவற்றை மதிக்கின்றோம்.”
“தவிர, அண்டை நாடு என்பதால் பூடானுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். பூடானுக்கு இந்திய பிரதமர் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தை நாங்கள் கவனத்தில் கொண்டோம்.
பூடானுடன் இந்தியா உறவை மேம்படுத்திக் கொள்வது குறித்து எங்களுக்கு கவலை எதுவும் இல்லை. அண்டை நாடுகள் ஒன்றுக்கொன்று நட்பு ரீதியாக உறவை மேம்படுத்திக் கொண்டால் அது சீனாவிற்கு மகிழ்ச்சியானது ஒன்று” என்று கூறியுள்ளார்.