சென்னை, ஜூன் 17 – ‘சுப்பிரமணியபுரம்’ படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.
அதைத் தொடர்ந்து இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றினார். இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு உருவாகும் ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது,
‘ஒரு படத்தில் நிறைய பாடல்கள் இருந்தால் அதனை இன்னிசை சித்திரம் என்பார்கள். அப்படியில்லை. படத்தில் நடிப்பவர்களே பாடி ஆடினால்தான் அது இன்னிசை சித்திரம். அந்த வகையில் இப்படம் ஒரு இன்னிசை சித்திரம்.
மொத்தம் 19 பாடல்கள். ஜாஸ், ஹிப்பாப், கானா, கர்நாடகம், நாட்டுபுறம் என பல தொகுப்புகளில் பாடல்கள் இடம்பெறுகின்றன. அதனை இப்படத்தில் நடிப்பவர்களே எழுதி, பாடி, ஆடப் போகிறார்கள் என்றார்.