Home நாடு சபா கடத்தல் சம்பவம்: மலேசிய சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு – நஸ்ரி

சபா கடத்தல் சம்பவம்: மலேசிய சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு – நஸ்ரி

620
0
SHARE
Ad

nazri-tahun-melawat-malaysiaகோலாலம்பூர், ஜூன் 17 – மலேசிய சுற்றுலாத்துறையை மாயமான மாஸ் விமானம் எம்எச் 370 பாதித்ததை விட அதிகமாக சபா கடத்தல் விவகாரம் பாதிக்கும் என சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸீஸ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அண்மையில் மட்டும் சீனாவில் இருந்து கோத்தா கினபாலுவிற்கு வரும் 76 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் நஸ்ரி குறிப்பிட்டார்.

“சபா மாநிலம் பாதுகாப்பானது என்பதை சுற்றுலா வருபவர்களுக்கு உணர்த்தும் வகையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். சபா அரசாங்கம் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நம்புகின்றேன். உள்துறை அமைச்சு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சபா மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்று நஸ்ரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி, சபா கடத்தல் விவகாரத்தால் மலேசிய சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு நஸ்ரி இவ்வாறு கருத்துரைத்தார்.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதரகங்கள், தங்களது குடிமக்களுக்கு சபா மாநிலத்தைப் பார்வையிடுவதற்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் நஸ்ரி தெரிவித்தார்.

“நான் இந்த பயண ஆலோசனைகளை திரும்பப் பெறுமாறு அந்த நாடுகளிடம் கோரிக்கை விடுக்க முயற்சித்தேன். ஆனால் தற்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் அது மிகவும் கடினம்” என்று நஸ்ரி கூறினார்.

நேற்று அதிகாலையில் சபா கிழக்குக் கரையில் குனாக் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மீன் பண்ணையிலிருந்து பிலிப்பைன்ஸ் துப்பாக்கிக்காரர்களால் இருவர் கடத்திச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பி வந்துள்ளார்.

சபா மாநிலத்தில் பிலிப்பைன்ஸ் ஆயூதமேந்திய கும்பலால், மக்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. கடந்த மூன்று மாதங்களில் கடத்தல் சம்பவம் மூன்று முறை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.