ஜூன் 17 – கொலம்பியாவில் அதிபர் தேர்தலில் மீண்டும் சாண்டோஸ் வெற்றி பெற்றுள்ளார். கொலம்பியாவில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகளில், சாண்டோஸ் 53 சதவிகித வாக்குகளையும், அவரது போட்டியாளர் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஆஸ்கர் இவான் ஜுலுவாகா 47 சதவிகித வாக்குகளையும் பெற்றனர்.
ஏற்கெனவே இருமுறை அதிபர் பதவி வகித்த அல்வரோ உரிபேயின் ஆதரவுடன் களமிறங்கிய ஜுலுவாகா, சாண்டோஸூக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்று கருதப்பட்டது. எனினும், ஜுலுவாகா வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கொலம்பியாவில் அரசுப் படையினருக்கும் இடதுசாரி கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடந்த 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக சாண்டோஸ் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சியின் பலனாக அவருக்கு தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.