மாஸ்கோ – (அதிகாலை 4.00 மணி நிலவரம்) உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும் கொலம்பியாவும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை கண்டதால் மேலும் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி இங்கிலாந்து குழுவின் தலைவர் (கேப்டன்) கேன் ஒரு கோலைப் போட்டார்.
ஆட்டம் முழுவதும் கொலம்பியா விளையாட்டாளர்களுக்கு நிறைய அளவில் மஞ்சள் நிற எச்சரிக்கை அட்டைகள் காட்டப்பட்டன.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 90 நிமிட நேர ஆட்டம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களில் கொலம்பியா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைப் படுத்தியது. இதனைத் தொடர்ந்து 30 நிமிட நேர நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.