பெய்ஜிங், ஜூன் 20 – சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல் (H7N9)-க்கு இதுவரை 62 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் கடுமையாக பரவிய, பறவை காய்ச்சலின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.
கோழி மற்றும் பறவைகள் மூலம் பரவும் இந்நோய்க்கான வைரஸ் கிருமி மனிதனை தாக்கி இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய நாடுகளின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், சீனாவில் புதியதாக பரவியுள்ள H7N9 பறவை காய்ச்சல், முந்தையதை விட அதிக வீரியம் கொண்டு இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை பறவை காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளனர். 400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க சீனா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கோழி மற்றும் பறவைகள் மூலம் இந்நோய் கிருமி பரவி வருவதால், கோழிகளுக்கு தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலும் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகளை மூடும்படியும் உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய வகை பறவைக் காய்ச்சல் இந்தியா, வியட்நாம், வங்காளதேசம், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.