புதுடில்லி, ஜூன் 20 – மக்களுக்கான திட்டங்கள் குறித்த அறிக்கைகள் ஆழ்ந்த செயல்திட்டங்களை கொண்டிருக்காமல், ‘வளவள’ ‘கொழ கொழ’ என இருப்பதால், பிரதமர் நரேந்திரமோடி அதிருப்தி அடைந்துள்ளார்.
ஒவ்வொரு திட்ட அறிக்கையும் தெளிவான செயல்முறைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பைசாவிற்குமான செலவு கணக்கை திட்டங்களில் காட்ட வேண்டும் என்றும் அவர் அரசுத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் தாங்கள் ஒதுக்கும் திட்டத்திற்கான செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து துறை செயலாளர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு பதில் கிடைக்காததால், துறை செயலாளர்கள் தாங்கள் ஒதுக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் சரியான விளக்கங்களுடன் கணக்கு காட்ட வேண்டும் என மோடி தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளார்.
மோடி, பிரதமராக பதவியேற்ற உடன், அடுத்த 100 நாட்களில் செய்யப் போகும் திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்படும் நிதித்தொகைகள் குறித்து அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறை செயலாளர்கள் மூலம் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதன்படி ஒவ்வொரு துறை சார்பிலும் பிரதமர் மோடியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் இவற்றில் பெரும்பாலானவைகள் துறைகளின் திட்டங்கள், அவற்றிற்கு தேவைப்படும் விஷயங்கள் பற்றியதாகவே உள்ளன. துறை செயலாளர்கள் அளித்த அறிக்கையை ஆர்வமுடன் பார்த்த மோடிக்கு, அவர்கள் அளித்திருந்த அறிக்கை அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அரசு தலைமை செயலக அதிகாரி, அரசு மக்கள் திட்டங்களுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் செலவிடும் ஒவ்வொரு பைசா குறித்த புள்ளிவிபர கணக்கு அறிக்கையை தான் பிரதமர் எதிர்பார்க்கிறார் என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த கிடுக்கி பிடியால் அரசு நிர்வாகிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், அடுத்த 2 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை வகுத்தார்.
ஆனால் அவர் ஒதுக்கிய தொகைகள் மக்கள் நலனுக்காக எவ்வாறு செலவிடப்பட்டன, அது மக்கள் வாழ்க்கை தரத்தை எவ்வாறு மாற்றியது என்பதை தொடர்ந்து கவனிக்கவில்லை.
ஆனால் மோடி பதவியேற்ற சிறிது காலத்திலேயே, அதுவும் பட்ஜெட் கூட தாக்கலாகாத நிலையில் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்டுள்ளது, அரசு நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஒரு திட்டம் வகுக்கப்பட்டால் அதற்கான செலவு ஒதுக்கீடு விபரம், அதனால் எத்தனை மக்கள் பயன் பெறுவார்கள் என்பன உள்ளிட்ட விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு பிரதமரிடமும், துறை அமைச்சரிடமும் அறிக்கை அளிக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த திட்டம் எவ்வளவு காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்பது குறித்து கால நிர்ணயத்தையும் செயலாளர்கள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வகுத்துள்ள இந்த கெடுபிடியால், பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு செலவு தொகையில் எந்த ஒரு அமைச்சரும் தலையிட்டு மாற்றங்கள் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட உள்ளன என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தனர்.