சென்னை, ஜூன் 20 – ஈராக்கில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு பணிக்கு சென்ற இந்தியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 6 செவிலியர்களும், கேரளத்தை சேர்ந்த 34 செவிலியர்களும், பயங்கரவாதிகளால் சுற்றிவளைக்கப்பட்ட சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் சிக்கித்தவித்து வருகின்றனர்.
40 செவிலியர்களில் 6 செவலியர்கள் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் . இது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
“ஈராக்கில் நடைபெற்று வரும் சமீபத்திய போரில் திக்கிரீட் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் 46 இந்திய தாதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தாங்கள் அறிவீர்கள்.
இதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சீனி, சிளி, சிமி, அலினா, நிது மற்றும் மனிதா ஆகிய தாதிகள் காணாமல் போய்யுள்ளனர். அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
தாதிகளின் உடல் நிலை குறித்தும், உயிருடன் இருக்கும் சூழ்நிலை குறித்தும் அறிய மிகவும் ஆவலாக உள்ளனர். இந்தியாவும், அனைத்துலக சமூகமும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அவசியமாகும். அதோடு இந்தியா 46 தாதிகளையும் பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பவும் அவர்களுடைய கடமையாகும்.
இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஈராக்கின் உயர்மட்ட அளவிலும், ஐ.நா உட்பட அனைத்துலக சமூக மட்டத்திலும், செஞ்சிலுவை சங்கத்திடமும் இந்த பிரச்சனையை கொண்டு சென்று,
தமிழகத்தை சேர்ந்த 6 தாதிகள் உட்பட இந்திய தாதிகள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவிற்கு வந்து சேர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.