சென்னை, ஜூன் 20 – காங்கிரசை ஒதுக்கி வைத்த தி.மு.க. பூஜ்யம் ஆகிவிட்டதாகவும், மோடியின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் 44-ஆவது பிறந்தநாள் விழா சத்திய மூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிருபர்களிடன் கூறியதாவது, தேர்தலில் தோற்று விட்டதால் காங்கிரஸ் காரர்கள் சோர்ந்துவிடவில்லை.
இந்த ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் காலம் விரைவில் வரும். எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் மோடியின் சாயம் விரைவில் வெளுக்கப் போகிறது.
ஒரு காலத்தில் இந்தியை எதிர்த்து ஒன்றுபட்டு போராடினோம். மீண்டும் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. எனவே, இந்தியை எதிர்த்து போராடும் காலம் விரைவில் வரும்.
காங்கிரஸ் ஆட்சியின் போது புகார்களில் சிக்கிய அமைச்சர்கள் நீக்கி வைக்கப்பட்டனர். ஆனால் இப்போது பாலியல் புகாரில் சிக்கியவர் கூட மத்திய அமைச்சர்களாய் இருக்கின்றார்.
தமிழகத்தில் காங்கிரஸ் பூஜ்யம் தான் அதை ஒதுக்கி வைத்து விட்டால் நாம் ஜெயித்து விடலாம் என்று நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் (தி.மு.க.) நடந்து முடிந்த தேர்தலில் பூஜ்யம் ஆகி விட்டார்கள். எந்த மக்களால் நாம் புறக்கணிக்கப்பட்டோமோ அந்த மக்களால் மகுடம் சூட்டப்படும் காலம் மீண்டும் வரும் என அவர் கூறியுள்ளார்.