பாக்தாத் , ஜூன் 20 – ஈராக்கில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு கலவரத்தை சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கா தனது ஆளுமையை அங்கு செலுத்த நினைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே நிகழ்ந்து வரும் மதக் கலவரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி அமெரிக்கா அங்கு ஆட்சியில் இருக்கும் அதிபர் மாலிக்கை அகற்றிவிட்டு புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. ஈராக்கில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பெரும்பான்மையான நகரங்களை தங்கள் வசமாக்கி விட்டது.
அதனால் தற்போதைய மாலிக் அரசை நீக்கிவிட்டு ஷியா, சன்னி, குர்து இன மக்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக் விவகாரத்தில் சன்னி முஸ்லிம்கள் தரப்புக்கு சவூதி அரேபியாவும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு ஈரானும் ஆதரவாக இருக்கின்றன. இந்த நாடுகளின் ஆதரவுடன் ஈராக்கில் ஒரு அரசு அமைவது அந்த வட்டாரத்தில் தனது மேலாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என அமெரிக்கா கருதுகின்றது எனக் கூறப்படுகின்றது.