பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – கடந்த ஏப்ரல் 30 -ம் தேதியோடு முடிவடைந்த முதல் காலாண்டில் ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நிகர லாபம் 12.44 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
மலேசிய பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கைகளின் படி, சந்தை ஆய்வு செலவினங்கள், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட செலவினங்கள் மற்றும் வரி விகிதங்களின் குறைப்பு ஆகிய காரணங்களால் ஆஸ்ட்ரோவின் நிகர லாபம் 128.33 மில்லியன் மலேசிய ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
இதே காலாண்டில் கடந்த வருடம், 114.14 மில்லியன் நிகர லாபம் மட்டுமே ஆஸ்ட்ரோ அடைந்தது. நடந்து முடிந்த காலாண்டில் ஆஸ்ட்ரோவின் வருமானம் 11.37 சதவீதம் உயர்ந்து 1.25 பில்லியன் மலேசிய ரிங்கிட்டாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் அதன் வருமானம் 1.13 பில்லியன் மலேசிய ரிங்கிட்டாக இருந்தது.
ஆஸ்ட்ரோவின் நிகர லாபம் உயர்விற்கு காரணம் தனி நபர் கட்டண சந்தா பயன்பாடு உயர்வு கண்டதே ஆகும். ஆய்வுக்குரிய காலக்கட்டத்தில் சந்தாதாரர்கள் கூடுதல் பயன்பாட்டினால் அவர்கள் செலுத்தும் சந்தாத் தொகை உயர்வு கண்டது.
தற்போது நடைபெற்று வரும் உலக்கிண்ண காற்பந்து போட்டிகளினால் ஆஸ்ட்ரோவின் சந்தாதாரர் வருமானமும் விளம்பரதாரர் வருமானமும் பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் அடுத்தக் காலாண்டில் ஆஸ்ட்ரோவின் வருமானமும் நிகர லாபமும் மேலும் கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.