கோலாலம்பூர், ஜூன் 23 – கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்துவது தொடர்பில், கத்தோலிக்க தேவாலயம் மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை 7 உறுப்பினர்கள் அடங்கிய கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தலைமை நீதிபதி ஆரிஃபின் ஸகாரியா தலைமையிலான 7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் 4 பேர் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி ஆரிஃபின் ஸகாரியா, மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் முகமட் ராவுஸ் ஸரீப், மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்லி அகமட் மகினுடின் மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி சுரியாடி ஹலிம் ஒமார் ஆகியோர் மனுவுக்கு எதிராகவும், சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் ஸைனுன் அல் மற்றும் ஜெப்ரி டான் கோக் வா ஆகியோர் மனுவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதன் மூலம் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக, மேல்முறையீட்டு நீதிமன்றம், ‘தி ஹெரால்டு’-க்கு எதிராக அளித்திருந்த தீர்ப்பை, தற்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிலைநிறுத்துவதுடன், இந்த வழக்கை முடிவுக்கும் கொண்டு வருகின்றது.