நியூயார்க், ஜூன் 25 – சிகப்பு கோளான செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் அனுப்பியுள்ள ‘க்யூரியாசிட்டி’ (Curiosity) விண்கலம் நேற்றுடன் அந்த கிரகத்தில் 687 நாட்களை கழித்துள்ளது.
இது செவ்வாய் கிரகத்தின் ஓராண்டு காலமாகும். பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. தரையிறங்கிய முதல் அங்கு தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிகப்பு கோளில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஓராண்டு கடந்ததை முன்னிட்டு தனது இயந்திர கைகளை வெளியே நீட்டி தன்னை தானே புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த விண்கலத்தை அனுப்பிய நோக்கம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக நாசா மையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பின் அங்கு உயிர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்த விண்கலம், அங்குள்ள பாறைகளை குடைந்ததன் மூலம் அதில் ஏரிப்படுகை ஒன்று இருந்ததையும், சிறிதளவு நீர் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.