புதுடெல்லி, ஜூன் 26- பிரதமர் நரேந்திர மோடி ‘டிவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் மூலமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதில் அவரை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழ்கிற மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவருக்கு நாளுக்கு நாள் ‘டிவிட்டர்’ ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, ‘டிவிட்டர்’ ஆதரவாளர்கள் எண்ணிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வெள்ளை மாளிகையை பின்னுக்கு தள்ளி முன்னேறி விட்டார்.
உலகளவில், டிவிட்டரில் அதிக எண்ணிக்கையிலான ஆதரவாளர்களை கொண்டவர்களின் பட்டியலில் மோடி 4ஆவது இடத்தில் உள்ளார். வெள்ளை மாளிகை 5ஆவது இடத்தில் உள்ளது. மோடிக்கு 49 லட்சத்து 81 ஆயிரத்து 777 பேர் ஆதரவாளர்களாக உள்ளனர். வெள்ளை மாளிகைக்கு 49 லட்சத்து 80 ஆயிரத்து 207 பேர் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.
முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இரண்டாவது இடத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.