ஹைதராபாத், ஜூன் 26 – கங்கை நதியில் குளித்து எழுவது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அணுசக்தி தேசிய மையத்தின், பொருட்களின் இயல்புகளை குணநலப்படுத்தும் மையம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ததில் குரோமியம் 6 என்ற நச்சு இருந்தது தெரிய வந்துள்ளது. குரோமியம் என்பது மிகவும் அத்தியாவசியமானது என்ற போதிலும் மிக மோசமான கழிவாகும். இருக்க வேண்டிய அளவை விட 50 சதவீதத்துக்கு மேல் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் உட்பட பல்வேறு உடல் நலக் கோளாறுகளை இது ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கூறி வரும் நிலையில், அதன் அவசியம் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் – EPA