வாரணாசி, நவம்பர் 10 – தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கங்கை நதிக்கரையை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் பதவியேற்றதும் தான் போட்டியிட்டு வென்ற வாரணாசி தொகுதிக்கு முதன்முறையாக வருகை புரிந்துள்ள மோடி, கடந்த சனிக்கிழமை அங்கு கங்கையை சுத்தப்படுத்தும் பணியை அவர் துவக்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா அனைத்து திறன்களும் ஆற்றல்களையும் கொண்ட நாடு. ஆனால் நாம் எதையுமே சாதிக்கவில்லை,” என்றார்.
பின்னர் மண்வெட்டியை எடுத்து கங்கை கரையின் ஒரு பகுதியில் தூர்வாரும் பணியை அவர் மேற்கொண்டார். அவர் வெட்டியெடுத்த மண்ணை, பிற தன்னார்வலர்கள் எடுத்துச் சென்று வேறு இடத்தில் கொட்டினர்.
இதைத் தொடர்ந்து நாட்டின் வளம் பெருக வேண்டி கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட மோடி, பக்தி சுற்றுலாவுக்கான தலைநகரமாக வாரணாசி நகரம் விரைவில் மாறும் என்றார்.
“இந்நகரத்தின் அடிப்படை கட்டமைப்பே மாற்றியமைக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், பார்ப்பதற்கு பரவசம் தரும் விதமாக கங்கை கரையின் ஓரத்தில் விளக்குகள் அமைக்கப்படும். சாலையோர விளக்குகளும், சிறப்பு முகாம்களும் அமைக்கப்படும் என உறுதியளிக்கிறேன்,” என்று மோடி மேலும் தெரிவித்தார்.