சென்னை, நவம்பர் 9 – காங்கிரசை விட்டு விலக வேண்டாம் என ஜி.கே.வாசனின் காலில் விழாத குறையாக கெஞ்சி, மன்றாடியதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் இப்போதே தயாராக உள்ளது என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
“காங்கிரசை விட்டு வாசன் விலகப் போவதாக அறிந்ததும் கவலையடைந்தேன். உடனடியாக அவரை தொடர்பு கொண்டேன். கட்சியைவிட்டுப் போகாதீர்கள் என்று காலில் விழாத குறையாக வம்படியாகக் கதறினேன். ‘போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்றும் சொல்லிப் பார்த்தேன். ஆனால் நான் மன்றாடியதையும் மீறி அவர் கட்சியை விட்டு விலகினார். இப்போது அவர் எந்தப் பதவியிலும் இல்லை. அதனால் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்” என்று இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ள அவர், தனக்குத் தலைவர் பதவி மீண்டும் கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“என்னுடைய வயது, அறிவையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. நிதானத்தோடும் பொறுமையோடும் செயல்படும் தருணம் இது. என்னுடைய கருத்து ‘தாறுமாறாக’ இருக்காது. சரியாக இருக்கும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நல்லது செய்தால் மனம் திறந்து பாராட்டுவேன். தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டுவேன். அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய இயல்பே அதுதான். அதை எப்போதும் மாற்றிக்கொள்ள முடியாது,” என்று இளங்கோவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.