கோலாலம்பூர், நவம்பர் 9 – தாம் ஏமாற்றுக்காரர் அல்ல என்று ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல பூப்பந்து வீரர் டத்தோ லீ சோங் வெய் தெரிவித்துள்ளார். சர்ச்சையில் சிக்கிய பின்னர் முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ள அவர், கடந்த ஒருமாதமாக நடைபெற்று வரும் விஷயங்களை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
“கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டி முடிந்து நாடு திரும்பிய வேளையில் ஊக்க மருந்து பரிசோதனையில் நான் தோல்வியடைந்ததாக ஒரு கடிதம் வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்தேன். நீண்ட காலமாக விளையாடி வரும் நிலையில் முதன் முறையாக இத்தகையதொரு அனுபவத்தை எதிர்கொள்வது மிகச் சிரமமானதாக உள்ளது,” என நடந்ததை நினைவுகூர்ந்துள்ளார் சோங் வெய்.
32 வயதான சோங் வெய் ஊக்க மருந்து பரிசோதனையில் இரண்டாவது முறையாகவும் தோல்வி அடைந்துள்ள நிலையில், அவருக்கு 2 ஆண்டு தடைவிதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
“எனது ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள எப்போதுமே ஊக்க மருந்து பயன்படுத்தியதில்லை. உலக அரங்கில் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வதே எனக்கு முக்கியம். நீண்ட காலமாக உலகின் முதல் நிலை வீரராக உள்ள நான், இதுவரை நூற்றுக்கும் அதிகமான ஊக்க மருந்து பரிசோதனைகளைக் கடந்து வந்துள்ளேன். ஊக்க மருந்துகளால் விளையும் ஆபத்தை நன்கு உணர்ந்தவன் நான். நண்பர்களுடன் வெளியே செல்லும்போது கூட எதையும் அருந்த மாட்டேன். அந்தளவு முன் ஜாக்கிரதையுடன் இருப்பவன் நான். என் மீது எந்தத் தவறும் இல்லை என உறுதியாக நம்புகிறேன். இந்த மருந்தை ஒரு மருத்துவர் பரிந்துரைக்காமல் ஒருவரால் மருந்துக் கடையில் வாங்கவே முடியாது. அதனால்தான் இரண்டாவது முறை ஊக்கப் பரிசோதனை என்றதும் தயக்கமின்றி அதற்கு ஒப்புக் கொண்டேன்,” என்று சோங் வெய் கூறியுள்ளார்.
தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தனது மனைவிக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி மற்றும் மலேசிய பூப்பந்து சங்க நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
“மலேசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளை மறக்கவே முடியாது. என்னைத் தேற்றும் விதமாக ஏராளமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. அவர்களில் ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சோங் வெய் மேலும் தெரிவித்துள்ளார்.