கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை மெர்டேகா தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பொது ஒற்றுமையை திரட்டும் முயற்சியில் ஓய்வுபெற்ற தேசிய பூப்பந்து வீரர் லீ சோங் வெய் பிளவுபடுத்தும் பிரச்சனைகளை உடைக்க தமது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.
சிறிய பிரச்சனைகள் தொடர்பாக நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோசமான விமர்சித்துக் கொள்வதால் அவர் சமூக ஊடகங்களைத் தவிர்த்து வருவதாக லீ கூறினார்.
“இது நான் போராடி வென்ற மலேசியா அல்ல,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் லின் டானுக்கு எதிரான போட்டியின் போது அனைத்து இனத்தைச் சேர்ந்த மலேசியர்களும் அவரை எவ்வாறு ஆதரித்தார்கள் என்று அவர் நினைவுக்கூர்ந்தார்.
லீயின் முன்னாள் பயிற்சியாளர் மிஸ்புன் சிடெக்குடன் ஒரு போட்டி இருந்தால், சீன மலேசியர்கள் லினுக்கு ஆதரவளிப்பார்கள் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு யாரோ சொன்னது குறித்தும் அவர் கூறினார்.
“முதன்மையானது, விசுவாசமும், நம்பிக்கையும் உங்கள் சக்தியாக இல்லாத போது, இதைச் சொல்ல நீங்கள் யார்?”
“இரண்டாவதாக, இரு வீரர்களையும் அறிந்த ஒரு மலேசியராக, நிச்சயமாக நான் மிஸ்பூனை ஆதரிப்பேன். மிஸ்பூன் எனது நாட்டுக்காரர், லின் இல்லை. மிஸ்பூன் வென்றால், என் நாடு மகிழ்ச்சியாக இருக்கும், எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஒருவேளை விடுமுறையாகக் கூட இருக்கும்.”
“லின் வென்றால், எனக்கு என்ன கிடைக்கும்?” என்று லீ எழுதியிருந்தார்.
லின்–மிஸ்பூன் கருத்துகளைத் தெரிவித்தவர் யார் என்று அவர் குறிப்பிடவில்லை என்றாலும், இது இஸ்லாமிய மத போதகர் ரிட்துவான் டீ அப்துல்லாவைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
தேசிய மொழிப் பாடத்திட்டத்தில் அரேபிய வனப்பெழுத்து அறிமுகப்படுத்தப்படுவது குறித்து சூடான வாதங்கள் போன்ற சமீபத்திய பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, மலேசியர்களை ஒரு சீரற்ற குரலால் பிரியக்கூடாது என்று லீ தனது பதிவில் கூறினார்.
“உணர்வற்ற நபர்கள் நம்மை வீழ்த்த நினைப்பதை அனுமதிக்காதீர்கள். அவர்கள் சீனர்கள், இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்களாக இருந்தாலும் சரி, நம் நாட்டையும், நம் மக்களையும் தோற்கடிக்க விடாதீர்கள். மலேசியர்கள் இதைவிடப் பெரியவர்கள். இந்த முட்டாள்தனங்களை விட நாம் வலிமையானவர்கள் என்பதைக் காட்டுங்கள்” என்று அவர் கூறினார்.