Home இந்தியா தமிழக அணைகள் கேரளத்துக்கு சொந்தமானது எப்படி? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

தமிழக அணைகள் கேரளத்துக்கு சொந்தமானது எப்படி? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

531
0
SHARE
Ad

jayalalithaசென்னை, ஜூன் 28 – தமிழகத்துக்குச் சொந்தமான நான்கு அணைகள் கேரளத்துக்கு சொந்தமானது எப்படி என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் இப்போது கேரளத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

2009-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழகத்துக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

ஆனால் கேரளம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளத்துக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது என உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர்ப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையிலும் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதாக ஜெயலலிதா கூறி வருகிறார். அப்படி என்றால் முல்லைப் பெரியாறு அணை கேரளத்துக்குச் சொந்தம் என்ற உரிமை யாரால் நிலை நாட்டப்பட்டது?

jayalalithaaமேலும் கேரள சட்டப்பேரவையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் பேசுகையில், “கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்க தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை யோசனை தெரிவித்துள்ளது. பம்பை, அச்சன்கோவில் ஆறுகளின் நீர், விவசாய மற்றும் பாசன பயன்பாட்டுக்கே சரியாக உள்ளது.

தேவைக்கு அதிகமாக நீர் இருப்பதில்லை. இது தொடர்பாக வல்லுநர் குழு ஒன்று ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். இதற்கு தமிழக அரசின் பதில் என்ன?

இதுதான் ஜெயலலிதா நதி நீர் இணைப்பு பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளும் முறையா?” என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.