புதுடில்லி, ஜூன் 28 – வரும் ஆகஸ்ட் 14 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருப்பதால் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாடாளுமன்றக் குழு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தது. அவர்களை வரவேற்று பேசிய நரேந்திர மோடி, “சர்வதேச அளவில் ஜப்பானுடன் இணைந்து செயலாற்றுவதில் இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்று தெரிவித்தார்.
மோடி ஆட்சி குறித்து பாராட்டிய ஜப்பான் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இசிரோ ஐசாவா கூறுகையில், “இந்தியாவில் பணியாற்றும் ஜப்பான் நாட்டு பிரஜைகள் மோடியின் அரசின் மீது பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்று இந்திய மக்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றார்.
இருநாட்டு உறவுகள் பற்றி பேசிய மோடி, பொருளாதார உறவுகளை தவிர்த்து இந்தியாவும் ஜப்பானும் வலுவான புத்தமத கலாச்சாரத்தை இணைக்கும் பாலமாக அமையவுள்ளதாக தெரிவித்தார்.