பிரேசில், ஜூன் 30 – சினிமாவுக்கும் காற்பந்து உலகுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு உலகக்கிண்ணக் காற்பந்து போட்டிகளும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு காற்பந்து நட்சத்திரத்தை உருவாக்கும். உச்சத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடும்.
எப்படி, திடீரென்று ஒரு தமிழ் சினிமா வெளிவந்து எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பஸ் கண்டக்டரையோ, ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளரையோ, உச்சத்துக்கு கொண்டு போக வைக்கின்றதோ –
எப்படி அவர்களைக் கோடிகளில் புரள வைத்து – உடனடியாக இலட்சக் கணக்கான இரசிகர்களின் ‘தலை’யாகவும் ‘தளபதி’யாகவும் உருவெடுக்க வைக்கின்றதோ –
அதே போன்றதுதான் காற்பந்து உலகமும்!
அந்த வகையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளின் உச்சகட்ட நட்சத்திரமாக – குறிப்பாக தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டின் கதாநாயகனாக ஒளிவிடத் தொடங்கியிருப்பவர் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் (படம்).
காற்பந்து உலகின் இளம் கதாநாயகன்…
ஹாலிவுட்டின் இளைய நட்சத்திரங்களுக்கு இணையாக கவர்ச்சியான, களையான, அழகான முகத் தோற்றமும் இன்னும் பள்ளி செல்லும் மாணவனைப் போன்ற நடை,உடை, பாவனைகளும் கொண்டவர் ஜேம்ஸ்.
ஒவ்வொரு கோலையும் அடித்து விட்டு கால்பந்து திடலின் முனைக்கு ஓடிவந்து, ஆரவாரிக்கும் இரசிகர்களின் முன்னால் நின்று கைதூக்கி ‘என்னைப் பெருமைப்படுத்துங்கள்- பாராட்டுங்கள்’ என்று கரங்களை நீட்டி ஜேம்ஸ் சிரித்துக் கொண்டே கேட்கும் தோரணை இரசிகர்களுக்கு புதுமையான காட்சி.
அதில் சற்றே ஆணவம் கொஞ்சம் தலைதூக்கியிருந்தாலும், மக்கள் அதனை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
சக்தி வாய்ந்த போதைப் பொருள் கடத்தக் கும்பல்களின் கூடாரமாகவும் – அதனால் அமெரிக்காவின் பகைமையைச் சந்தித்துள்ள நாடுகளில் ஒன்றாகவும் திகழும் கொலம்பியாவை, உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கியபோது ஆரம்பத்தில் யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
ஆனால், கட்டம் கட்டமாக முன்னேறி, கிரீஸ் நாட்டை 3-0 கோல் கணக்கில் தோற்கடித்த போதுதான் – இரண்டாவது சுற்றுக்கான 16 நாடுகளில் ஒன்றாகத் தேர்வான போதுதான் –
கொலம்பியக் குழுவின் திறனும் – அதற்குப் பின்னணியில் பக்கபலமாக இருந்தது 10ஆம் எண் கொண்ட முன்னணி ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகுயசின் தனித்துவமிக்க ஆற்றலும் என்பது காற்பந்து இரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் புலப்பட ஆரம்பித்தது.
சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 16 நாடுகளுள் ஒன்றாக தேர்வு பெற்ற கொலம்பியா மற்றொரு பலம் பொருந்திய தென் அமெரிக்க நாடான உருகுவேயை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, காற்பந்து இரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது ஒரு புறமிருக்க –
அந்த இரண்டு கோல்களையும் லாவகமாக அடித்தது இதே ஜேம்ஸ்தான் என்பதால் அவரது புகழும் தற்போது உச்சிக்கு சென்றுவிட்டது.
22 வயதே ஆன ஜேம்ஸ்தான் இன்றைய நாளில் கொலம்பியா நாட்டின் செல்ல மகன் – அனைவரையும் கவர்ந்து விட்ட கதாநாயகன்.
பிரேசிலின் நெய்மாருக்கு இணையான பிரபல்யம்
பிரேசிலின் நெய்மார்…
போர்ச்சுகலின் ரொனால்டோ, இங்கிலாந்தின் ரூனி, போன்ற நட்சத்திரங்களுக்கு வயதாகி, பழைய முகங்களாகி விட, பிரேசிலின் நெய்மாரை நோக்கித்தான் உலகின் அத்தனை தகவல் ஊடகங்களும் கவனம் செலுத்தி வந்தன.
ஆனால், இப்போதோ நெய்மாருக்கு இணையான கவர்ச்சியையும், கவனத்தையும் ஜேம்ஸ் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார்.
இனி, உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவடைந்த பின்னர், ஐரோப்பியாவின் காற்பந்து விளையாட்டுக் குழுக்கள் ஜேம்சை கொத்திக் கொண்டு போக காத்திருக்கின்றன. கோடிக்கணக்கான டாலர்கள் கொடுத்து அவரை விலைக்கு வாங்க இனி ஏலங்கள் ஆரம்பிக்கும்.
ஆனால், அதற்கு முன்பாக மற்றொரு மகத்தான போர்க்களம் ஒன்று காற்பந்து உலகில் ஜேம்சுக்காக காத்திருக்கின்றது.
வெல்லப் போவது யார்? பிரேசிலா? கொலம்பியாவா?
எதிர்வரும் ஜூலை 4ஆம் தேதி கால்இறுதி ஆட்டத்தில் பிரேசிலைச் சந்திக்கப் போகும் கொலம்பியாவின் ஆட்டம்தான் அது.
அந்த போர்க்களத்தில் தனது முழுத்திறனையும் காட்டி, ஜேம்ஸ் கோல் மழை பொழிந்து, இந்த முறை கிண்ணத்தைக் கைப்பற்றக் காத்திருக்கும் –
போட்டிகளை ஏற்று நடத்தும் நாடான பிரேசிலின் கனவுகளை மட்டும் சிதைத்துவிட்டால் அதன் பின்னர் அவர் உலகப் புகழ் அடைவதோடு மட்டுமல்ல – சரித்திரத்திலும் இடம் பெற்றுவிடுவார்.
எதிர்வரும் பிரேசில் – கொலம்பியா இடையிலான ஆட்டம் மற்றொரு காரணத்திற்காகவும் உலகம் முழுவதிலும் காற்பந்து இரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிண்ணத்தை இந்த முறை எங்கள் கரங்களில்தான் ஏந்துவோம் என்ற கங்கணத்தோடு களமிறங்கும் பிரேசிலின் நம்பிக்கையின் சின்னம் முன்னணி ஆட்டக்காரர் நெய்மாரும்,
அந்த நம்பிக்கையைத் தகர்ப்பதற்கும் – பிரேசிலை வெல்வதற்கும் கொலம்பிய குழு தனது ஆதாரபலமாகக் கருதும் ஜேம்ஸ் ரோட்ரிகுயசும்,
முதன் முறையாக நேரடியாக மோதப் போகும் களமாகவும் பிரேசில் – கொலம்பியா ஆட்டம் திகழப் போகின்றது.
அதனால்தான், எதிர்வரும் ஜூலை 4ஆம் தேதி நடைபெறப் போகும் கொலம்பியா-பிரேசில் நாடுகளின் ஆட்டம் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஆட்டமாகத் திகழப்போகின்றது.
இந்த ஆட்டம், இரண்டு சிறந்த குழுக்களின் ஆட்டமாக இருக்கும் என்பதோடு,
உச்ச நட்சத்திரமாகிவிட்ட இரண்டு இளம் காற்பந்து புயல்களில் – யார் யாரை வெற்றி கொள்ளப் போகின்றார்கள் –
யார், யாருடைய கனவுகளைச் சிதைக்கப் போகின்றார்கள் –
என்பதைத் தெரிந்து கொள்ள, உலகக் காற்பந்து இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க –
தங்கள் நாடுகள் அரை இறுதி தகுதிச் சுற்றுக்குச் செல்லுமா என்பதைத் கொண்டாட பிரேசில் – கொலம்பியா நாட்டு மக்களும் வாண வேடிக்கைகளுடன் காத்திருக்க –
நீங்களும் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற ஆட்டத்தைப் பார்க்க மறவாதீர்கள்!
-இரா.முத்தரசன்
படங்கள்: EPA