சென்னை, ஜூன் 30 – ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டியாக காமெடி வேடத்தில் அறிமுகமானவர் கருணாஸ். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். அதன் பிறகு திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளபுரம் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இனி கதநாயாகனாக மட்டுமே நடிப்பார் என்று செய்திகள் பரவின. இதனை கேட்ட கருணாஸ் கூறியதாவது, “நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாவது என்பது புதிதல்ல. ஆனால் அதுவே தொடர்வதில்லையே. நகைச்சுவை நடிகர்களுக்கென்று ஒரு வரைமுறையான கதைகள் மட்டுமே பொருந்தும்.
சினிமாவின் வழக்கமான கதாநாயகத்தனம் உள்ள கதைகள் சரி வராது. பத்துப்பேரை அடிப்பது பஞ்ச் வசனம் பேசவது எதுவுமே காமெடி நடிகர்களுக்கு ஒத்துவராது.
அப்படிப்பட்ட கதைகளில் நடித்தால் படத்தின் முடிவு வேறு மாதிரி ஆகும். காமெடி நடிகர்களுக்கு பொருத்தமான கதைகள் அமையும் பட்சத்தில்தான் தொடர முடியும்.
நான் எப்பவுமே காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதில்லை. காமெடி வேடங்கள்தான் ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்க்கும். இப்போது வி.பி.பிரசாத் இயக்கத்தில் சகுந்தலாவின் காதலன், தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம்.
கார்த்தி நடிக்கும் கொம்பன், சத்யசிவா இயக்கும், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கும் இரண்டு படங்கள், தர்மராஜ் இயக்கும் இளமைக்காலங்களில், உத்தமதிருடன் என பத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நல்ல கதை கிடைத்து, சரியான தயாரிப்பாளர் கிடைக்காத போதுதான் நானே தயாரிப்பாளரானேன். அதனால் கொஞ்சம் கடனாகி விட்டது. அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டிருக்கிறேன்.
சிறிது காலத்திற்கு தயாரிப்பாளன் என்கிற கிரீடத்தை கழட்டி வைத்துவிட்டு நகைச்சுவை நடிகனாக நடிக்கவே விரும்புகிறேன்” என கருணாஸ் கூறினார்.