கோலாலம்பூர், ஜூலை 4 – தமிழ் சினிமாவில் சுய ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடுடனும் வாழ்ந்து வருபவர்கள் ஒரு சிலரே. அவர்களில் சிகரெட், மது, மாது என்று எந்த ஒரு பழக்கமும் இல்லாமல், இன்று வரை நல்ல பண்புகளுடன் வாழ்ந்து வருபவர் நடிகர் சிவக்குமார்.
பல படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துக் கொண்டே இருந்தவர் திடீரென ஒருநாள் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன் பின்னர் ‘சித்தி’ தொலைக்காட்சி தொடரில் நடித்தவர். பின்னர் நிரந்தரமாக திரையில் இருந்து ஒதுங்கி ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், பிரபல ஆனந்த விகடன் வார இதழில், விகடன் மேடை பகுதியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் சிவக்குமார், தான் நடிப்பில் இருந்து ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மனம் திறந்து விளக்கமளித்துள்ளார்.
ரசிகரின் கேள்விக்கு சிவக்குமார் அளித்துள்ள பதில் பின்வருமாறு:-
“அது நான் ரொம்பத் தெளிவா எடுத்த முடிவு. அப்போதைக்கு, ‘நடிப்பில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்’னு சொல்லியிருந்தேன். அதன் பிறகு இயக்குநர் பாசில் உட்பட பலரும் என்னை நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனா, ‘போதும். எனக்கு நடிப்பு மறந்துடுச்சு விட்டுடுங்க’னு சொல்லிட்டேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ தான் கடைசியா நான் நடிச்ச படம். நான் யாரையும் குறை சொல்றதுக்காக இதை சொல்லலை. காட்டின் ராஜாவா கம்பீரமா வளைய வந்துட்டு இருந்த சிங்கம், வயசாகி கண்ல அழுக்கு கட்டி, பார்வை மங்கி, முக்கி முனகினா, பார்க்க நல்லாவா இருக்கும்? அந்த மாதிரியான நிலைமை ஒரு நடிகனுக்கு வரக் கூடாது” இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் குருவான சிவாஜி தன் வயதான காலத்தில் கௌரவ வேடத்தில் நடித்த போது பட்ட வருத்தங்களை தன் வாழ்வில் படக் கூடாதுனு நினைத்ததாகவும் சிவக்குமார் கூறியுள்ளார்.
அதே போல், எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்திலேயே அழகும், திறமையுமாக சினிமாவில் நுழைந்த சிவக்குமார், நடிப்பில் உச்சம் தொட முடியாமல் போனது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், “சினிமாக்காரன், படத்துல நல்லவனா தான் நடிக்கிறான்னு ரசிகனுக்குத் தெரியும். இருந்தாலும் அவனை நம்புவான். ரசிகனோட இந்த அறியாமை இருக்குற வரைக்கும் தான் சினிமாக்காரனோட பொழப்பு ஓடும். ‘நடமாடும் கடவுள்’னு சில நடிகர்களை கொண்டாடினாங்க ரசிகர்கள். “அவர் ஏன் கடவுள்? -னு கேட்டா தெரியலைன்னு சொல்வாங்க. அந்த மாதிரியான ரசிகர்கள் எனக்கு இல்லை. நான் ரெண்டாம் கட்ட ஹீரோ தான். பெருமையா சொல்லிக்கொள்ள என் நடிப்பில் எதுவும் இல்லை. ஆனா அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.