Home இந்தியா நான்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தில் கைது!

நான்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தில் கைது!

1024
0
SHARE
Ad

tamil-tigers-flagராமநாதபுரம், ஜூலை 5 – இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 4 இலங்கைத் தமிழர்களை தமிழகத்தின் தென்முனையான தனுஷ்கோடி பகுதியில் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 39 வயதான எஸ்.சதீஸ் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கணக்காய்வாளர் (அக்கவுண்டன்ட்) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் வடமுனையான மன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வந்தடைந்து கடற்கரையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த போது அவரையும் அவருடன் இருந்த மேலும் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். சதீஸ் யாழ்ப்பாணம் இந்து பல்கலைக் கழகத்தில் கணக்கியல் படித்ததோடு, 2004 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் 38 வயதான எஸ்.ரவீந்தரன் என்ற ரவி, 38 வயதான ஜெ.சாந்தி, 55 வயதான மலர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் தங்களின் பதவி காலம் முடியும் இறுதிநாளில் காங்கிரஸ் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யும் உத்தரவை பிறப்பித்தது. இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் முற்றாக துடைத் தொழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிரூட்டும் நடவடிக்கைகளில் அதன் எஞ்சிய உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அவர்களில் சிலர் மலேசியாவை தளமாகக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்ட செயல்பட்டு வந்தனர் என சுட்டிகாட்டி வந்த மலேசிய காவல்துறை இதுவரை ஏழுபேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கை மலேசியாவில் காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளை கொண்டு கிடைத்த தகவல் பரிமாற்றங்களினால் சாத்தியமாகியுள்ளது என நம்பப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில், அவர்களின் பல்வேறு ஆயுத கொள்முதல் பறிமாற்றங்கள் மலேசியாவில் உள்ள ஆயுத வியாபாரிகளின் மூலம் நடைபெற்றதாகவும் மலேசிய காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

பின்னர் இலங்கையில் கைது செய்யப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்பவர் தான் விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக செயல்பட்டு அவர்களுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

முதலில் மலேசியாவை தலைமையமாகக் கொண்டு 1987 ஆம் ஆண்டில் ஒரு கப்பல் போக்குவரத்து நிறுவனத்தையும் தொடக்கினார். ஆனால், அவரது நடவடிக்கைகளை மலேசிய காவல் துறை மோப்பம் பிடித்து கண்டு கொண்டதால் 1990 ஆம் ஆண்டில் அவர் தாய்லாந்திற்கு தனது தளத்தை மாற்றிக் கொண்டார்.

ராஜிவ் காந்தி படுகொலையை தொடர்ந்து இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு எதிராக கடுமையாக செயல்பட்டதால் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பலவற்றை அவர்கள் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றிக் கொண்டனர்.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் தீவிர தாக்குதலால் விடுதலைப் புலிகள் இயக்கம் துடைத்தொழிக்கப்பட்டவுடன் கேபி, பிரபாகரனுக்கு பதிலாக தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கோலாலம்பூரில் உள்ள கியூன் ஹோட்டலில் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை ராணுவ புலணாய்வு குழுவுக்கும் மலேசிய காவல் துறையினருக்கும் ஏற்பட்ட ரகசிய தகவல் பறிமாற்றங்களின் மூலம் இந்த கைது நடவடிக்கை சாத்தியமானது.

பின்னர் 2009 ஆம் ஆண்டு கொழும்புவுக்கு மலேசிய காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் கொழும்பில் இருந்து வருவதாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.