மும்பை, ஜூலை 5 -20 ஆண்டுகலமாக இருந்து வரும் பாஜக, சிவசேனா உறவு உடையப் போகிறது. சிவசேனாவுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜகவினர், கட்சி மேலிடத்தை நெருக்க ஆரம்பித்துள்ளனர்.
அக்டோபர் மாதம் வரவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனராம். மகாராஷ்டிர பாஜகவினரின் உணர்வுகளுக்கு மத்திய தலைவர்களும் மதிப்பளித்து சரி என்று சொல்லியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மும்பையின் அந்தேரி விளையாட்டு வளாகத்தில் நடந்த மாநில அளவிலான பாஜக மாநாட்டில் இந்தக் கோரிக்கை வலுப் பெற்று காணப்பட்டதாம். கிட்டத்தட்ட அத்தனை பேருமே சிவசேனா உறவு போதும் என்பதை வலியுறுத்திப் பேசினார்களாம்.
சிவசேனா உறவை விட்டு விட்டு வந்தால்தான் பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் என்றும் கூட்டத்தில் பகிரங்கமாகவே பேசப்பட்டதாம். மேலும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக இது நடந்தால்தான் சிவசேனாவின் நெருக்குதல் அரசியலுக்கு முடிவு கட்டலாம் என்றும் கூறப்பட்டதாம்.
மூத்த தலைவர் மது சவான் பேசுகையில், சிவசேனா எப்போதுமே நம்மை சித்திரவதை செய்துதான் பழக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் மகாராஷ்டிராவில் பாஜகவே இல்லாமல் போய் விடும். எனவே சீக்கிரமே உறவை முறிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில்,”கட்சியினரின் கோபம் நியாயமானதே. கட்சியினர் மத்தியில் சிவசேனா உறவு துண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏகமாக உள்ளது.
இதை கட்சித் தலைமையும் உணர்ந்துள்ளது என்றார். எனவே விரைவில் பாஜக, சிவசேனா உறவு முறிவு குறித்த செய்திகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.!