மும்பை – மகராஷ்டிரா மாநில அரசியலில் இதுவரை நீடித்து வந்த இழுபறி நிலை ஓரளவுக்கு முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக-சிவசேனா கட்சிகளுக்கிடையில் கூட்டணி முறிவு ஏற்பட்ட நிலையில், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் நேஷனலிஸ்ட் காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் அடுத்த மாநில அரசை அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சியின் பிரதிநிதியே முதல்வராக இருப்பார். மற்ற இரு கட்சிகளும் அதற்கான ஆதரவை வழங்கும். யாருக்கு எந்த அமைச்சர் என்ற பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சிவசேனா சார்பில் அதன் தலைவர் உத்தவ் தாக்கரே மகராஷ்டிரா மாநில முதல்வராகப் பதவியேற்பார் என்ற ஆரூடம் நிலவுகிறது. ஆனால் அவர் முதல்வர் பதவியைத் தனது மகன் ஆதித்யா தாக்கரே வகிக்க விட்டுக் கொடுப்பார் என்ற ஊகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்க ஒப்புக் கொள்ளாவிட்டால் அவருக்குப் பதிலாக மற்றொரு சிவசேனா தலைவரான சஞ்சய் ரவுட் மகராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்பார் என்றும் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க மாநில ஆளுநரிடம் உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.