கோலாலம்பூர், ஜூலை 5 – சிஐஎம்பி வங்கி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இதுவரை பணியாற்றி வந்த டத்தோஸ்ரீ நஜிர் துன் ரசாக் (படம்) செப்டம்பர் 1ஆம் தேதி முதற்கொண்டு சிஐஎம்பி வங்கியின் தலைவராக நியமனம் பெறுகின்றார்.
அவருக்கு பதிலாக மற்றொரு புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படுவார். நஜிர் துன் ரசாக் கஜானா நேஷனல் பெர்ஹாட் எனப்படும் மத்திய அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நஜிர் துன் ரசாக் தற்போதைய நடப்பு சிஐஎம்பி தலைவர் டான்ஸ்ரீ முஹமட் நோர் யூசோப்பிற்கு பதிலாக இந்தக் குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்கின்றார். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து டான்ஸ்ரீ முஹமட் நோர் யூசோப் சிஐஎம்பி குழுமத்தின் அனைத்துலக ஆலோசனை மன்றத்தில் இடம்பெறுவார்.
பிரதமரின் கடைசி தம்பியுமான நஜிர் துன் ரசாக் இந்த புதிய நியமனங்களின் மூலம் மத்திய அரசாங்கத்தின் முதலீட்டு மற்றும் வர்த்தக ஈடுபாடுகளில் மேலும் அதிகளவில் பங்கு பெறுவார் என வணிகத் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
48 வயதான நஜிர் துன் ரசாக் நாட்டின் மிக இளமையான வங்கித் தலைவராக இனி செயலாற்றி வருவார்.