கோலாலம்பூர், ஜூலை 5 – இயந்திரங்கள் மனிதர்களைப் போன்று உருமாறி போராட்டம் நடத்தும் சாகசப் படமான ‘டிரான்ஸ்ஃபோர்மர் – ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்ஷன்’ (Transformers – Age of Extinction) என்ற ஆங்கிலத் திரைப்படம் மலேசியாவில் இதுவரை வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்துள்ள படமாக சாதனை படைத்துள்ளது.
டிரான்ஸ்ஃபோர்மர் பட வரிசையில் நான்காவது படமாக வந்துள்ள இந்தப் படம் மலேசியாவில் ஒரே நாளில் அதிக வசூல் சாதனை செய்துள்ள படமாகவும் திகழ்கின்றது.
மைக்கல் பே (Michael Bay) என்ற பிரபல ஹாலிவுட் பட இயக்குநர் இந்தப் படத்தையும் இதற்கு முன் இந்த வரிசையில் வெளிவந்த மூன்று படங்களையும் இயக்கியிருக்கின்றார்.
இதற்கு முன்னாலும் டிரான்ஸ்ஃபோர்மர் வரிசை படங்கள் மலேசியாவில் வசூல் சாதனைகள் புரிந்திருந்திருக்கின்றன. இவை தவிர அயர்ன்மேன் 3 (Iron Man 3), தெ அமேசிங் ஸ்பைடர்மேன் 2(The Amazing Spiderman 2), தெ அவெஞ்சர்ஸ் (The Avengers), ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்(Fast and Furious) போன்ற ஆங்கிலப் படங்கள்தான் இதுவரை மலேசியாவில் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்கள் என்ற சாதனையைப் புரிந்துள்ளன.
ஆனால், இந்த எல்லாப் படங்களையும் முறியடித்து, புதிய படமான ‘டிரான்ஸ்ஃபோர்மர் –ஏஜ் ஆஃப் டிஸ்டிங்ஷன்’ வசூல் சாதனை புரிந்துள்ளது.
அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையிலான கூட்டுத் தயாரிப்பாக மலர்ந்துள்ள இந்தப்படம் சீனா மற்றும் ஹாங்காங் நாடுகளில் படமாக்கப்பட்டது.
3 மணி நேரப் படமாக வெளியிடப்பட்டுள்ள டிரான்ஸ்ஃபோர்மர் படம் 3-டி வடிவத்திலும் மலேசியத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் கதாநாயகன் மார்க் வாஹ்ல்பெர்க் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த ஜூன் 26 வெளியான இந்த திரைப்படம் தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளாக மலேசியாவின் பல நகர்களில் அரங்கேறி வருகின்றது.