Home நாடு மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடி அதிரடி வேட்டை!

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடி அதிரடி வேட்டை!

623
0
SHARE
Ad

Tan-Sri-Khalid-Abu-Bakarகோலாலம்பூர், ஜூலை 5 – பல்வேறு பயங்கரவாத ஆயுதப் போராளிக் குழுக்கள் மலேசியாவில் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மலேசியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர் மலேசியாவில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிரூட்டிப் புதுப்பிக்க அவர்கள் முயன்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் வேட்டையை மலேசியா காவல்துறையின் சிறப்புப் படையினர் நாடெங்கும் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் இந்த இயக்கத்தைச் சேர்ந்த இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவை தளமாகவும் தலைமையகமாகவும் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்டும் நடவடிக்கைகளில் இலங்கை அகதிகளாக நாட்டில் இருந்துவரும் பலர் முயன்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதேபோன்று அதிரடி வேட்டை இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நால்வரும் செர்டாங், செந்தூல், சுங்கைப்பீசி மற்றும் கோலாலம்பூர் நகர மையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே மூன்று பேர் கடந்த மே 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இவர்களில் ஒருவர் 1999 ஆம் ஆண்டில் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலில் சம்பந்தப்பட்ட வெடிகுண்டு தயாரிப்பு நிபுணர் என புக்கிட் அமான் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட வெடி குண்டு நிபுணர் இலங்கை அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் இருந்து வந்துள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த தலைவர்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் 1990ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் ஏராளமான போலி மலேசிய பயண கடப்பிதழ்களும் (பாஸ்போட்) மலேசிய குடிநுழைவுத் துறையின் சின்னம் கொண்ட போலி ரப்பர் முத்திரைகளும் மேலும் சில வெளிநாட்டுத் தூதரகங்களின் போலி முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மனிதக் கடத்தல் செயல்களிலும் ஈடுபட்டு வந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இலங்கையில் நிகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தொடர்ந்து பல விடுதலைப் புலிகள் மலேசியாவிற்கு தப்பி வந்து இங்கு அகதிகளாகவும் வணிகர்களாகவும் தொழில் நிபுணர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என காவல்துறை கண்டறிந்துள்ளது.

இதற்கிடையில், மலேசியாவில் தங்கியுள்ள அகதிகளில் 4280 அகதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் வேறு நாடுகளில் அடைக்களம் புகுவதற்காக ஐக்கிய நாட்டு அகதிகள் நல பிரிவுக்கு விண்ணப்பத்தவர்கள் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.