பிரான்ஸ், ஜூலை 7 – உலக பொருளாதாரம் 2014- ம் ஆண்டு தொடக்கத்தில் மந்தமாக ஆரம்பித்தாலும், எதிர் வரும் 2015-ம் ஆண்டில் சிறப்பானதாக இருக்கும் என்று அனைத்துலக நிதி வாரியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐஎம்எஃப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிறிஸ்டியன் லகார்டே கூறுகையில், ” மத்திய வங்கிகளின் இணக்கமான கொள்கைகளினால் மக்களின் தேவைகளைப் பொறுத்தே பொருளாதார தாக்கம் இருக்கும். எனவே, சர்வதேச நாடுகள் தங்களின் முக்கிய வளர்ச்சிப் பணிகளான கட்டமைப்புகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் தேவையான முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளின் பொருளாதாரம் குறித்து அவர் பதில் அளிக்கையில், “ஆசிய நாடுகளில் பெரிய அளவிலானா பொருளாதார மந்த நிலை ஏற்படாது. குறிப்பாக சீனாவிற்கு எந்தவொரு அபாயகரமான நெருக்கடியும் தற்சமயம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரம் பற்றிய ஐஎம்எஃப்-ன் முன்னறிவிப்பு இந்த மாதத்தின் இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான அறிக்கையை ஒப்பிடுகையில், இந்த மாதம் வெளியாகும் அறிக்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் உலக பொருளாதாரம் 2014-ம் ஆண்டு 3.6 சதவீதமாகவும், 2015-ம் ஆண்டு 3.9 சதவீதமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.