வாஷிங்டன், அக்டோபர் 4 – 2015-ல் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் இருக்காது என ஐஎம்எஃப் எனப்படும் அனைத்துலக நிதி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டியன் லகர்டே (படம்) தெரிவித்துள்ளார்.
2015-ல் உலக நாடுகளின் வளர்ச்சி பற்றி சமீபத்தில் லகர்டே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-
“2015-ல் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சொல்லிக் கொள்ளும் படியான முன்னேற்றம் இருக்காது. எதிர்வரும் வாரங்களில் ‘அனைத்துலக நாணைய நிதியம்’ (International Monetary Fund) வெளியிடும் புள்ளி விவரங்களில் இது குறித்து அறிவிக்கப்படும்.”
“உலக நாடுகள் அனைத்துலக நாணய நிதியம் உட்பட பல நிதி மையங்களில் வாங்கி உள்ள அதிக கடன்கள், வேலை வாய்ப்பின்மை, பண வீக்கம் போன்றவை பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்தும் காரணிகளாக மாறி உள்ளன. குறிப்பாக ஐரோப்பா இந்த விவகாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.”
“பொருளாதார வளர்ச்சி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சற்றே முன்னேற்றத்தை கண்டாலும், ஜப்பானில் சுமாரான முன்னேற்றமும், ஐரோப்பாவில் மிகக் குறைவான முன்னேற்றமுமே இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், “நாளை நாம் பொருளாதார சரிவை சந்திக்க உள்ளோம் என்று கணிக்கப்பட்டால், இன்றே முதலீடுகளையும், நுகர்வுத் திறனை குறைத்துக் கொள்ள வேண்டும். முன்னேற்றம் அடைந்த நாடுகள், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஜூலை மாதம் அனைத்துலக நிதியம், உலக பொருளாதார வளர்ச்சி இந்த வருட இறுதியில் 3.4 சதவீதமாகவும், அடுத்த வருடத்தில் இருந்து 4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணித்து இருந்தது. இந்நிலையில், அனைத்துலக நிதியம் மீண்டும் கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது. ஆனால் இம்முறை ஜூலை மாதம் கணக்கிட்டதை விட மிகக் குறைவான அளவே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கூறப்படுகின்றது.