டெல்லி, சென்னை ஜூலை 12 – நாடாளுமன்றத்தில் தூங்கி வழிந்த ராகுல்காந்தியை, முன்வரிசையில் உட்கார செய்துள்ளார் காங்கிரஸ் தலைவரும், ராகுலின் தாயாருமான சோனியாகாந்தி.
நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை, விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, ராகுல்காந்தி தனது இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாக படங்கள் வெளியாகியிருந்தன. இது பாஜக உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனத்தை உருவாக்கியது.
இந்நிலையில் நேற்று, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருந்தபோது, நடுவில் ஐந்து நிமிடம், இடைவெளி எடுத்துக்கொண்டார். அப்போது, சோனியா தனது மகனான ராகுல்காந்தியை, தன் பக்கத்தில் முன்வரிசையில் வந்து அமருமாறு அழைத்தார்.
இதையடுத்து ராகுலும் முன்வரிசையில் தாய் அருகே வந்து அமர்ந்துகொண்டார். இதன்பிறகு இன்றும் நாடாளுமன்றத்தில் ராகுல் முன்வரிசையிலேயே தொடருகிறார். முதல் வரிசையில் வந்து அமர்ந்தால், தூக்கம் வராது என்பதற்காக சோனியா இந்த யோசனையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராகுல் அமர்ந்த இடத்தில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா அமர்ந்திருந்தார். அவரும் விவாதம் நடந்தபோது, சற்று கண் அசந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அலைபாய்கின்றன.