புதுடில்லி : நடந்து முடிந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்களில் வென்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரசின் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய முதல் உரையில் மோடியையும், பாஜகவையும் ஆவேசமான உரைகளின் மூலம் கடுமையாகத் தாக்கினார். நாடாளுமன்ற மரபுகள் விதிகளுக்கு மாறாக பல பதாகைகளையும், சமயப் புகைப்படங்களையும் காட்டிப் பேசினார்.
அவரின் பேச்சை இடைமறித்து பாஜகவின் அமிட் ஷாவும், பிரதமர் மோடியும் பதிலடி கொடுத்தனர். இருப்பினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு ராகுல் தனது கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து அவரின் உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
இதனால், இந்திய நாடாளுமன்றம் கலகலப்பும் பரபரப்பும் நிறைந்த களமாக உருமாறியுள்ளது. தமிழ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர்.
அடுத்து வரும் ஆண்டுகளில் பாஜகவுக்கு நாடாளுமன்றக் கூட்டங்கள் பெரும் தலைவலியாக மாறலாம் என்பதற்கு உதாரணமாக தொடக்கக் கட்ட விவாதங்கள் அமைந்துள்ளன.