Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவில் மெக்டொனால்ட், கேஎஃப்சி உணவகங்களுக்கு தடையா? 

சீனாவில் மெக்டொனால்ட், கேஎஃப்சி உணவகங்களுக்கு தடையா? 

514
0
SHARE
Ad

KFC MC

பெய்ஜிங், ஜூலை 22 – சீனாவில் காலாவதியான இறைச்சியை மறுதேதி இட்டு பயன்படுத்துவதாக சர்வதேச உணவகங்களான மெக்டொனால்ட், கேஎஃப்சி மற்றும் பீட்சா ஹட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீன அரசு சமீப காலத்தில் உணவுத்துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சீன தொலைக்காட்சி நிறுவனம், மெக்டொனால்ட், கேஎஃப்சி, பீட்சா ஹட் போன்ற நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் அமெரிக்காவின் அரோரா ஓஎஸ்ஐ குழுமத்தின் ஹுசி என்ற நிறுவனம் காலாவதியான மாட்டிறைச்சி மற்றும் கோழி வகைகளை மறுதேதியிட்டு விற்பனை செய்வதாக ஒளிபரப்பியது.

#TamilSchoolmychoice

இந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து மெக்டொனால்ட் மற்றும் கேஎஃப்சி நிறுவனங்கள் ஹுசியின் வர்த்தக தொடர்பை துண்டித்து விட்டதாக அறிவித்தன. எனினும் ஷாங்காயில் உள்ள சீன உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதுவரை வாடிக்கையாளர்கள் இந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.

மெக்டொனால்ட் மற்றும் கேஎஃப்சி இந்த குற்றச்சாட்டு குறித்து தங்கள் இணைய தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹுசி நிறுவனத்தின் மீது தீவிர விசாரணை நடந்து வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவதே எங்கள் இலக்கு” என்று அறிவித்துள்ளன.

தற்போது ஹுசி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்முதல் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அதன் வியாபார மையத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. விசாரணை முடிவில் உண்மை நிரூபிக்கப்பட்டால் மெக்டொனால்ட், கேஎஃப்சி உணவகங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

சீனாவில் மிகப்பெரும் வர்த்தகத்தை செய்து வரும் அந்நிறுவனங்களுக்கு சீனா அரசின் இந்த அதிரடி நடவடிக்கை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.