சென்னை, ஜூலை 22 – நபிகள் நாயகத்தின் போதனைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்தியா அமைதிப் பூங்காவாகத் திகழும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது, “ரமலான் என்று அழைக்கப்படும் நோன்புக் காலம் இஸ்லாமியர்களின் வசந்த காலமாகும். நோன்பிருத்தல் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். நோன்பிருத்தல் இறைவனின் அளவற்ற அன்பையும் அருளையும் பெற்றுத் தருகிறது.
ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு நோற்றவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் உள்ள ரய்யான் என்ற வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாம் என்பது நல்வழி மார்க்கமாகும்.
ஒற்றுமையுடன் இருப்பது, நல்ல காரியங்கள் செய்வது, தர்மம் செய்வது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதவர் என்று பாராமல் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வது, கோபத்தை அடக்குவது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளைப் போதித்தவர் நபிகள் நாயகம்.
நற்பண்புகளை மட்டும் போதிக்காமல் தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர் நபிகள் நாயகம். நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் கடைப்பிடித்து வாழ்ந்தால், இந்தியா அமைதிப் பூங்காவாக விளங்கும்” என்று கூறினார் முதல்வர் ஜெயலலிதா.