கோலாலம்பூர், ஜூலை 22 – மாஸ் விமானம் எம்எச் 17 உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்டு 298 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த பேரிடரில் உயிரிழந்த நெதர்லாந்து மாணவியின் தந்தை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எழுதிய மனதை உருக வைக்கும் கடிதம் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது.
வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானத்தில் பயணம் செய்த நெதர்லாந்தை நாட்டை சேர்ந்த 17 வயது மாணவி எல்ஸ்மிய்க் டி போர்ஸ்ட்டின் (படம்) நினைவுகள் அவரது தந்தையை பெரிதாக பாதித்துள்ளது.
இது குறித்து அவர் ரஷ்யா அதிபர் புதினுக்கு அவர் எழுதி உள்ள கடித்தத்தில், “கனவுகளை சுமந்த எனது மகளை கொலை செய்தவர்களுக்கு நன்றி. என் அன்பு நிறைந்த ஒரே மகள் எல்ஸ்மியக் டி போஸ்ட்டை கொலை செய்ததற்கு, ரஷ்யா அதிபர் விளாடிமீர் புடின், கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசுக்கு மிகவும் நன்றி”
“அடுத்த ஆண்டு பள்ளி படிப்பை தனது தோழிகள் ஜூலிலா மற்றும் மாரினெவுடன் முடித்து விட்டு டெல்ப் பல்கலைக்கழகத்தில் கட்டுமான பொறியியல் படிபை படிக்க விரும்பினார். அதில் சேர்வதில் அவள் மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். ஆனால் என் மகள் தற்போது உயிருடன் இல்லை”
“என் மகளின் கனவுகளை புதைந்து போகச் செய்ததில் நீங்கள் மிகவும் கர்வமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். என் வாழ்க்கையும் சேர்த்து அழித்ததற்கு மீண்டும் நன்றி” என்று அவர் அக்கடிதத்தில் மனம் வெறுத்து குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளின் அரசியல் விளையாட்டுகளால் பலியாகும் அப்பாவிகளின் பிரதிநிதியாக இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார் என்று உலக நாடுகளின் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வளர்ந்த நாடுகளிடையே பெருகிவரும் அதிகார மயமாதல் மனிதத்தையே அழித்து விடுமோ என்ற அச்சம் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.