பெய்ஜிங், ஜூலை 22 – பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப் பகுதிகளில் வீசிய கடும் சூறாவளிக்கு இதுவரை 112 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வாரம் சீனா மற்றும் பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் வீசிய ரம்மாசன் சூறாவளிக் காற்று அந்த பகுதிகளில் மிகப்பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூறாவளிக் காற்றில் சிக்கி பிலிப்பைன்ஸில் இதுவரை 94 பேறும், சீனாவில் 18 பெரும் உயிரிழந்துள்ளனர். இந்த சூறாவளி புயல் கடந்த வெள்ளியன்று வடக்கு வியட்நாமை கடக்கும்போது, தெற்கு சீனாவில் உள்ள ஹைனன் தீவை கடுமையாக தாக்கியது.
மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த சூறாவளியில் சிக்கி தென்சீன கடற்பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பாதுகாப்பு கருதி மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஹைனன் தீவில் இந்த புயலில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த வட்டாரத்தில் சூறாவளி புயலை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. சூறாவளி புயல் தாக்கிய பகுதிகளில் தற்போது மீட்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தென்சீன கடற்பகுதிகளில் கடந்த 41 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெரும் சேதத்தை இதுவரை வேறு எந்த புயலும் ஏற்படுத்தவில்லை என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.