பிராங்க்ஃபர்ட், ஜூலை 27 – உலகமெங்கும் விமான விபத்துகளும், அசம்பாவிதங்களும் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருந்தாலும், வான்வெளிப் பயணங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன.
அதற்கேற்ப விமான நிறுவனங்களும், விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை விமான சேவைகளில் புகுத்தி வருவதோடு, நவீன வசதிகளைக் கொண்ட புதிய வகை விமானங்களையும் உருவாக்கி வருகின்றன.
பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய அகண்ட உள்ளமைப்பு கொண்ட புதிய ஏர்பஸ் ஏ350 விமானத்தை உருவாக்கியுள்ளது.
பெரிய அந்த விமானத்தை இயக்குவதற்கான வசதிகள் சில விமான நிலையங்களில் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு, அந்த விமானம் தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டு வருகின்றது.
ஜூலை 25ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரின் விமான நிலையத்தில் தனது வெள்ளோட்டத்தின் ஒரு பகுதியாக புதிய ஏர்பஸ் ஏ350 முதன் முதலாக வந்திறங்கிய காட்சிகளையும், அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வை விமான நிலைய பணியாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழும் காட்சிகளையும் இங்கே காணலாம்.