ஜெனிவா, ஜூலை 27 – வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்கும் வரையில், ‘உலக வர்த்தக அமைப்பு’ (WTO)-ன் வர்த்தக வசதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது.
உலக நாடுகளிடையே தாராள மயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் புதிய நெறிமுறைகள் அடங்கிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை நடைமுறை படுத்துவதற்கான உலக வர்த்தக அமைப்பின் பொதுக் குழு கூட்டம் ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் தாராளமயமாதல் ஒப்பந்தத்தை உலக நாடுகளுக்கு இடையே நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது அந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் பங்கேற்ற உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியத் தூதர் அஞ்சலி பிரசாத் கூறியதாவது:-
“வளரும் நாடுகளில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழான மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எட்டப்படவில்லை. எதிர்காலத்தில் பூதாகாரமாக இருக்கும் இந்தப் பிரச்னைக்கும், ஏழை நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இதர பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறு தீர்வு காணப்படும்வரை, டிஎப்ஏ ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. மேற்கூறிய பிரச்சனைகளுக்கு நிரந்திர தீர்வு காணும்வரை, டிஎஃப்ஏ ஒப்பந்தத்துக்கான ஆதரவையும் இந்தியா அளிக்காது” என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியாவின் கருத்தினை ஏற்று உலக வர்த்தக அமைப்பு டிஎப்ஏ ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தும் நிகழ்வை ஒத்திவைத்துள்ளது.