கோலாலம்பூர், ஜூலை 27 – உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசோனின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. நடப்பு காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 23 சதவீதம் உயர்ந்துள்ளது.
எனினும் அந்நிறுவனம் சுமார் 126 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இழப்பை சந்தித்து உள்ளதாக அறிவித்துள்ளது.
இணைய வர்த்தகத்தில் பெரும் வருவாயை ஈட்டி வந்த அமேசானின் இந்த திடீர் இழப்புக்கு முக்கிய காரணம், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘ஃபயர் போன்’ (FirePhone) ஆகும்.
இணைய வர்த்தகம் மட்டும் அல்லாது தொழில்நுட்பத் துறையிலும் கால்பதிக்க அமேசான் சில வருடங்களாக முயன்று வந்தது. அதன் முன்னோட்டமாக அந்நிறுவனம் குழந்தைகளுக்கான தட்டை கணினி (tablets) உட்பட சில கருவிகளை தயாரித்தது.
அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ஃபயர் போன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. காரணம் அந்த திறன்பேசிகளில் புகுத்தப்பட்ட முப்பரிமாண தொழில்நுட்பம் தான்.
முப்பரிமாண (3டி) பயன்பாடு, ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு சவால் விடும் தொழில்நுட்பம் என பல்வேறு வகையில் அந்நிறுவனம் மூலம் பிரகடனம் செய்யப்பட்டதால், அந்த திறன்பேசிகள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் பயனர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஃபயர் போன் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
அந்த திறன்பேசிகளில் புகுத்தப்பட்ட முப்பரிமாண தொழில்நுட்பம் பயனருக்கு புது வித அனுபவத்தை தராமல் அமேசானின் வர்த்தக நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த திறன்பேசிகளில் மேம்படுத்தப்பட்டுள்ள செயலிகள் அனைத்தும் அடிப்படை செயலிகளாகவும் இருப்பதோடு, மின்சேமிப்புக் கலனின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றும் விமர்சிக்கப்படுகின்றது.
அமேசான் சந்தித்துள்ள இந்த திடீர் சரிவு பற்றி அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி டோம் ஸ்குடேக் கூறுகையில், “ஃபயர் போன்கள் அமேசானின் வர்த்தகத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி உள்ளது. எனினும், எங்கள் நிறுவனத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.