நியூயார்க், ஜூலை 26 – இணையத் தளம் வழி பொருட்களை விற்பனை செய்யும் உலகப் புகழ் பெற்ற அமேசோன் நிறுவனம் புதிதாக உருவாக்கி வெளியிட்டுள்ள அமேசோன் ஃபையர் திறன்பேசி ( Amazon Fire Phone) நியூயார்க் நகரிலுள்ள ஏடி & டி (AT&T store) விற்பனை மையத்தில் நேற்று – ஜூலை 25ஆம் தேதி விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சி.
திறன்பேசிகளின் வர்த்தக உலகில் அமேசோனின் பிரவேசம் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
விற்பனைக்கு வந்துள்ள அமேசோன் திறன்பேசிகள், தற்போது அமெரிக்காவில், ஏடி & டி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் விற்பனை முகாம்களில் மட்டும் விற்கப்பட்டு வருகின்றன.
4.7 அங்குல குறுக்களவு கொண்ட தொடு திரையையும், 13 மெகா பிக்சல் திறன் கொண்ட புகைப்படக் கருவியின் (கேமரா) இணைப்பையும் இந்த திறன்பேசிகள் கொண்டிருக்கின்றன.
இணையத் தள வணிக மையமாக தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ள அமேசோன், ஆப்பிள், சாம்சுங் போன்ற இராட்சச வணிக நிறுவனங்களுடன் போட்டி போட்டு திறன்பேசிகள் விற்பனையில் வெற்றி பெற முடியுமா என்பதைக் காண வணிக உலகம் ஆவலுடன் காத்திருக்கின்றது.