ஜூன் 7- இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் ‘அமேசான்’ (Amazon) நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சங் திறன்பேசிகளுக்குப் போட்டியாக முப்பரிமாணத் தன்மை கொண்ட திறன்பேசிகளை உருவாக்கி வந்தது. தற்போது, அந்த திறன்பேசிகள் இம்மாதம் 18-ம் தேதி வெளியிடப்படலாம் என்று கூறப்படுகின்றது.
அமேசான் திறன்பேசிகளின் முப்பரிமாணத் தன்மை
ஆரம்பக் கட்டங்களில் அமேசான் உருவாக்கி வந்த திறன்பேசிகள் முப்பரிமாணத் திரை கொண்டதாக இருக்கும் என ஆருடங்கள் கூறப்பட்டன. எனினும், எல்ஜி நிறுவனத்தின் P920h OPTIMUS 3D மற்றும் ஹெச்டிசியின் Evo 3D ஆகிய முப்பரிமாணத் திரையுடன் கூடிய திறன்பேசிகள் சந்தையில் பெரிய லாபத்தை எட்ட வில்லை.
இதனால் அமேசான் திறன்பேசிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீஸரில் அமேசான் திறன்பேசிகள் முப்பரிமாணத் திரை கொண்டதாக இல்லாமல் ‘முப்பரிமாண இடைமுகம்’ (3D Interface) கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகின்றது.
முப்பரிமாண இடைமுகம்
அமேசான் திறன்பேசிகளின் முப்பரிமாண இடைமுகத்தின் மூலம் பயனர்கள் திறன்பேசிகளின் இயக்கங்களில் புதிய அனுபவத்தை உணரலாம் என்று கூறப்படுகின்றது.
இண்டென்ஸ் பேரலக்ஸ் எபக்ட் (Intense Parallax Effect) எனும் தொழில்நுட்பத்தின் மூலம் திறன்பேசிகளின் திரையில் உள்ள படங்களோ, மெனுக்களோ பயனர்களின் தலை அசைவை வைத்து செயல்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அமேசான் திறன்பேசிகளில் பயனர்களின் அசைவுகளை கண்காணிக்க நான்கு முனை கேமராக்கள் உள்ளன என்றும், அதன் மூலம் திறன்பேசிகள் செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
முன்னணி நிறுவனங்களுக்கே சவால் விடும் அளவுக்கு பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ள இந்த திறன்பேசிகள் பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.