ஜூன் 19 – உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் முப்பரிமாணத் தன்மை கொண்ட திறன்பேசிகளை உருவாக்கி வந்தது, அனைவரும் அறிந்ததே.
அது பற்றி அறிவிக்கப்பட்ட நாள் முதல், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினையும், ஆர்வத்தையும் ஏற்படுத்திய அமேசான் திறன்பேசி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
ஃபயர்போன் என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த திறன்பேசிகளை அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசாஸ் அறிமுகப்படுத்தினார்.
அமேசான் திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள்:
அமேசானுக்கு முன்னர், எல்ஜி நிறுவனத்தின் பி920எச் ஆப்டிமஸ் 3டி (P920h OPTIMUS 3D) மற்றும் ஹெச்டிசியின் ஈவோ 3டி (Evo 3D) ஆகிய முப்பரிமாணத் திரையுடன் வெளிவந்த திறன்பேசிகள் சந்தையில் பெரிய லாபத்தை ஈட்டவில்லை.
அதனால் அமேசான் அதற்கு மாறாக முப்பரிமாணத் திரை கொண்டதாக அல்லாமல், 4 கேமராக்களைக் கொண்டு பயனர்களுக்கு தேவையான செயல்பாடுகளை தன்னிச்சையாக செய்யும் ‘முப்பரிமாண இடைமுகம்’ (3D Interface) கொண்டதாக உருவாகியுள்ளது.
பயர்போன் திறன்பேசிகளின் ஆக்கக்கூறுகள்
4.7 அங்குல அளவு கொண்ட ஐபிஎஸ் திரை, அதில் காணொளி அழைப்புகளுக்கான 13MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திறன்பேசிகளின் வேகத்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ‘கோவாட் கோர்’ (quad-core) 2.2GHz செயலி, அட்ரினோ 330 கிராபிக்ஸ், 2ஜிபி முதன்மை நினைவகம் ஆகியவை அடிப்படை ஆக்கக் கூறுகளாக உள்ளன.
பயர்போன்களின் முப்பரிமாண தன்மை
நான்கு முனைய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த திறன்பேசிகள், பயனர்களின் முக அசைவுகளை உள்வாங்கி, அதன் மூலம் பயனர்களுக்கான செயல்பாடுகளை செய்யும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திறன் வாய்ந்த இந்த கேமராக்கள் மூலம் பயனர்கள் மிகச் சிறந்த தெளிவான காட்சிகளைப் பெற முடியும்.
இணைய வர்த்தகம்
அமேசானின் பிரதான வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த திறன்பேசியானது, அமேசானின் இணைய வர்த்தகத்தை மிக எளிதாக்கியுள்ளது. மேலும், இந்த திறன்பேசிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ஒரு வருட விற்பனைச் சந்தாவை இலவசமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அமேசானின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
அமேசானின் பயர்போன் $649 முதல் $749 வரை, இதர சலுகைகள் சார்ந்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமேசான் திறன்பேசிகள் வெளிவந்துள்ளதால் சந்தைகளில் பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது.
படங்கள்: EPA