பெட்டாலிங் ஜெயா, ஜூன் 7 – இஸ்தான்புல் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், தற்போது உடல் நலம் தேறி வருவதால் இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து ஹாடி அவாங்கின் உதவியாளர் டாக்டர் அகமட் சம்சூரி மொஹ்டார் கூறுகையில், மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை தனக்கு திருப்தி அளிப்பதாகவும், ஹாடிக்கு முறையான உணவும், நல்ல ஓய்வும் தேவை என மருத்துவர்கள் பரிந்துரைதிருப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும், ஹாடி அவாங் எப்போது மீண்டும் மலேசியா திரும்புவார் என்பதை அவர் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
திரெங்கானு மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான ஹாடி அவாங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இஸ்தான்புல் வந்திருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எல்லா வகையான உதவிகளையும் வழங்க வேண்டும் என இஸ்தான்புல்லில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.