கோலாலம்பூர் ஜூன் 6 – மெட்ரிகுலேஷன் கல்வி பயில ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் 1500 இடங்களில் இவ்வாண்டு 1182 பேர் கல்வி பயில தகுதி பெற்றுள்ளனர் என்று கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகம் தான். மேலும் தற்போது காலியாக உள்ள 318 மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புக்கு சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் கட்டத்திலேயே தேர்ச்சி பெற்றிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், மெட்ரிகுலேஷன் மீது அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும் எண்ணி பெருமைப்படுவதாகவும் கமலநாதன் கூறினார்.
இந்த மேல்முறையீட்டில் செய்துள்ள 318 மாணவர்களுக்கான முடிவு நேற்று மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவர்கள் எதிர்வரும் ஜூன் 12 ஆம் தேதிக்குள் தங்களின் கல்வி பதிவைச் செய்துகொள்ளுமாறு கமலநாதன் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு ஒட்டுமொத்தமாகமெட்ரிகுலேஷன் உயர்கல்விக்கு 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்துள்ளனர். அவர்களில் 4,517 இந்திய மாணவர்கள் இணையவழி மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் மனம் தளராமல் எஸ்டிபிஎம் கல்வியை மேற்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். அல்லது பிடித்த கல்வியைப் பயில்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.