Home நாடு இந்து சமயத்தை இழிவுபடுத்திய தனது கருத்துக்கு உஸ்தாஜ் மன்னிப்பு கேட்டார்!

இந்து சமயத்தை இழிவுபடுத்திய தனது கருத்துக்கு உஸ்தாஜ் மன்னிப்பு கேட்டார்!

668
0
SHARE
Ad
Ustaz

புக்கிட் மெர்த்தாஜாம், ஜூலை 31 – கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஷா ஆலமில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்து சமயத்தை இழிவு படுத்துவது போல் கருத்துரைத்த இஸ்லாமிய மதபோதகர் உஸ்தாஜ் சாஹுல் ஹமிட் தனது கருத்துக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தார்.

“நான் எல்லோரிடமும் எனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். குறிப்பாக இந்திய சமுதாயம் மற்றும் எனது கருத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். நானும் ஒரு இந்தியர் தான் என்பதை உணர்கின்றேன். இந்தியாவை பாரம்பரியமாக கொண்ட நானே, இந்து மதம் குறித்து அனைவரின் முன் அவ்வாறு பேசி இருக்கக்கூடாது” என்று இன்று உஸ்தாஜ் தெரிவித்தார்.

“நான் இனவாத சர்ச்சையை ஏற்படுத்தவோ அல்லது இந்துக்களை அவமதிக்கவோ அவ்வாறு கூறவில்லை. அந்த கூட்டத்தில் வந்திருந்த மக்களை கவர்ந்து அவர்களை எனது பேச்சில் கவனம் செலுத்த வைக்கவே அவ்வாறு பேசினேன். எனினும், என்னுடைய கூட்டம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு எனக்கு தெரியாமலேயே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றும் உஸ்தாஜ் கூறினார்.

#TamilSchoolmychoice

தான் வெளியிட்ட கருத்தை எண்ணி மிகவும் வருந்துவதாகவும், எதிர்காலத்தில் இனி எப்போதும் இது போன்ற கருத்துகளை தான் வெளியிடப்போவதில்லை என்றும் உஸ்தாஜ் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் தலைவர்களை சந்தித்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் உஸ்தாஜ் குறிப்பிட்டார்.

மேலும், தன் மீது அளிக்கப்பட்டுள்ள அனைத்து காவல்துறை புகார்களும் திரும்பப் பெறப்பட்டு, எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் இருக்காது என்று தான் நம்புவதாகவும் உஸ்தாஜ் தெரிவித்தார்.

“அந்த காணொளியை பதிவு செய்த நபரிடம் அதை நீக்குமாறு கேட்டுக் கொண்டேன். நான் மன்னிக்கப்படுவேன் என நம்புகின்றேன். என்னை சரி செய்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது” என்றும் உஸ்தாஜ் தெரிவித்தார்.

அதே வேளையில், தான் பாஸ் கட்சி உறுப்பினராவதற்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் தான் அவ்வாறு பேசியதாகவும், தனது பேச்சுக்கும், பாஸ் கட்சிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்றும் உஸ்தாஜ் தெரிவித்தார்.